This is conveyed by Mr.Naasar on Theri audio release function
தமிழ் திரைப்பட நடிகர் நாஸரின் மூத்த மகனின் பெயர் நூருல் அசான் ஃபைசல். திரைப்படங்களில் அறிமுகமாக வேண்டுமென்ற அவரின் கனவுகளை தகர்த்தெரிந்தது ஒரு விபத்து. மே மாதம்,2014 இல், மகாபலிபுரம் செல்லும் சாலையில் அவர் நண்பர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒரு லாரியுடன் மோதிய விபத்தில் அவர் நண்பர்கள் மூவர் உயிரிழந்தனர். அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி பலருக்கும் தெரிந்ததே. அவரைப்பற்றிய இன்னொரு செய்தி பலருக்கு தெரியாதிருக்கலாம். அவர் ஒரு மிகத்தீவிர இளையதளபதி விஜய் ரசிகர்.
படுத்த படுக்கையாக, பேசவும் இயலாது, சிகிச்சை பெற்று வந்த நிலையில்தான் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் “தெறி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் கண்ணோட்டம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகிற்று. அவருக்கு விஜய் எவ்வளவு பிடிக்கும் என்று அறிந்த அவர் குடும்பத்தினர் தெறி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவருக்கு காண்பித்தனர். அப்பொழுதுதான் இந்த மனதை உருக்கும் நிகழ்வு நிகழ்ந்தது. பேசவும் இயலாது, உடல் சிதைந்து, படுத்தபடுக்கையாக இருக்கும் ஃபைசல் அந்த ஒரு நொடியில் வாய் திறந்து பேசிய முதல் வார்த்தை, “தெறி!” இதை பார்த்து நெகிழ்ந்த அவர் உற்றார், இந்த நிகழ்வை விடியோ எடுத்து , இளையதளபதியின் காரியதரிசியின் வாயிலாக அவருக்கு அனுப்பினர்.
அப்பொழுது இளையதளபதி கோவாவில் தெறி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார்.
அந்த காணொளியை பார்த்ததும் ஒரு அரைமணிநேரம் எதுவும் பேசவியலாது நெகிழ்ந்து போனவர், உடனே தன் காரியதரிசிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த அளவு அன்பு என்னை நெகிழவைக்கிறது, சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாக நான் சென்று ஃபைசலை சந்தித்தாக வேண்டும் என்றார்.
சென்னைக்கு வந்ததுமே ஃபைசலை சந்தித்து, ஒரு இரண்டுமணிநேரத்திற்கு மேலாக அவருடனும், அவர் குடும்பத்தாருடனும் கலந்து , உரையாடி, அவர்களை மகிழ்வித்தார். விடைபெறும்போது தன் பர்ஸனல் தொலைபேசி எண்ணை ஃபைசலுக்கு கொடுத்து , எப்பொழுது, என்ன வேண்டுமென்றாலும், நான் இருக்கிறேன், என்னை தொடர்பு கொள்ளவும் என்று அன்புடன் கூறி விடைபெற்றார்.
இந்த நிகழ்வு எல்லோர் மனதையும் தொடும் என்பது நிதர்சனம். அத்தோடு, எல்லாவற்றிலும் விளம்பரம் தேடும் , புகைப்படம் பிடித்து செய்தித்தாள்களில், ஊடகங்களில் செய்தியாக எழுதவைக்கும் இந்த நவீன விளம்பர யுகத்தில் , சில சமயம் செய்யாத உதவியையும் செய்ததாகச் சொல்லி பொய்யானதொரு விளம்பரத்தை பரப்பிவிடும் முன்னணி நடிகர்கள் இருக்கும் இந்த யுகத்தில் , இந்த நிகழ்வைப்பற்றிய ஒரு காணொளியோ, புகைப்படமோ வெளியாகாதது, இளையதளபதி விஜய் மீதான மரியாதையை, நன்மதிப்பை , பலமடங்கு உயர்த்துகிறது. அவர் எப்பொழுதும் சொல்லும் “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான ரசிகர்கள்” என்பது எவ்வளவு உண்மை என்பது உளமாற உணற முடிகிறது.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு எனும் வள்ளுவனின் கூற்றுக்கு இதுவொரு உதாரணம்.